வண்டலூர் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து
வண்டலூர் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து – காவலர்கள் வராததால் 2- மணி நேரமாக சாலை நடுவில் நின்ற வாகனங்கள்..
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூட் (48). இவர் மின் தூக்கி (LIFT) தயாரிக்கும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக
பொத்தேரி வரை சென்று விட்டு வீட்டிற்கு தனது காரில் வரும்போது கிருஷ்ணமூர்த்தி (48), தேவா (23), ராஜா (25) ஆகியோர் உடன் வந்துள்ளனர்.
அப்போது அவரது கார் வண்டலூர் மேம்பாலத்தின் கீழே உள்ள சிக்னலில் நிற்பதற்காக மெதுவாக ஓட்டிவந்துள்ளார். அப்போது கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி எம்.சாண்ட் ஏற்றி சென்ற கனரக லாரி ஜூட் -இன் கார் மீது அதிவேகமாக மோதியது.
இதில் முன்னால் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச்சென்ற மினி லாரி மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் எம் ஸ்டேண்ட் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சிறு காயம்கூட ஏற்படாமல் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் அளித்தும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காவலர்கள் யாரும் வராத காரணத்தால் விபத்தில் சிக்கிய மூன்று வாகனங்களும் சாலையின் நடுவே நின்றன.
இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனங்களை நீங்கள்தான் அகற்ற வேண்டும் என போலீசார் தரப்பில் கூறியதால் வாகனங்கள் மூன்று மணி நேரமாக அங்கேயே நிற்கிறது.