ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில், வென்ற ராஜஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ரன்கள், துருவ் ஜூரல் 32 ரன்களும், தேவ்தத் படிக்கல் 21 ரன்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ரன்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ரன்களும் எடுத்தனர்.
இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.