ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அமெரிக்கா தலைமையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனின் ஏழு பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா என்ன செய்கிறது என்பதை உலகம் இப்போது பார்க்க வேண்டும். இது போரை முடிப்பதற்கான முயற்சி அல்ல, உக்ரைனின் அரசையும் மக்களையும் அழிப்பதற்கான செயல்” என சமூக ஊடகங்களில் செலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள், ரஷ்யா உக்ரைனின் மின் கட்டமைப்புகளை திட்டமிட்டு இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதாகவும்
குற்றம் சுமத்துகின்றன
இதனிடையே, ரஷ்யாவின் தென்மேற்கு சரடோவ் பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், குடியிருப்பு கட்டிடமொன்று சேதமடைந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஷ்ய நிலப்பரப்பில் ஒரே இரவில் 41 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.





