மேலும் உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம், போர் கருவிகளை அனுப்புகிறது அமெரிக்கா
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது தொடர்ந்து தீவிரமடைந்து உள்ளது. உக்ரைனில் பாக்முக் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா போரிட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து, ஆயுதம் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா முன்வந்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதிபர் பைடன் வழங்கிய அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது.
இந்த ராணுவ தொகுப்பு அடங்கிய உதவியின்படி ஏவுகணைகள், பீரங்கிகள், பீரங்கி ஒழிப்பு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பிற சாதனங்களை அமெரிக்கா வழங்கும் என அறிக்கை தெரிவிக்கின்றது. உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரால் பல மனித உயிர்கள் விலைபோயுள்ளன. உக்ரைன் மக்களின் எல்லையற்ற தைரியம் மற்றும் உறுதியான முடிவு மற்றும் உக்ரைனுக்கான சர்வதேச சமூகத்தின் வலிமையான ஆதரவு உள்ளது ஆகியவற்றை நினைவுகூர்கிறோம்.
உக்ரைனின் இறையாண்மையை பாதுகாத்து கொள்ளும் வகையில் அதற்கு ஆதரவளிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து வந்துள்ளன என்பதற்காக அமெரிக்கா பாராட்டு தெரிவித்து கொள்கிறது என்று அறிக்கை தெரிவிக்கின்றது. அவர் கூறும்போது, ரஷ்யா மட்டுமே தனியாக போரை இன்றே முடிவுக்கு கொண்டு வரமுடியும். அதனை ரஷ்யா செய்யும்வரை, எவ்வளவு காலம் ஆனாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நாங்கள் துணைநிற்போம் என்று கூறியுள்ளார்.