முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலையுடன் பிள்ளையானிற்கு தொடர்பு: வெளியான பகீர் தகவல்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் மட்டக்களப்பில் தற்போது இராஜாங்க அமைச்சராகயிருப்பவருக்கும் தொடர்பிருந்தது என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் காணி ஆணையாளர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,“கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவராக தான் இருந்தபோதே முன்னாள் உபவேந்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அக்காலத்தில், தற்போது மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சராகயிருப்பவர் தொடர்புபட்டது குறித்து பல்கலைக்கழகத்தில் பேசப்பட்டது.சட்டத்திற்கு முரணான வகையில் காணி கோரி என்மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதுடன் அதனை கவனத்தில் கொள்ளாத நிலையிலேயே என்னை பழிவாங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்னும் பதவியை பயன்படுத்தி தவறான செயற்பாடுகளையும் அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளையுமே அவர் முன்னெடுத்து வருகின்றார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விசேட தேவையுடையவர்களின் தொழில் மேம்பாட்டிற்காக உரிய சட்டதிட்டங்களுக்கு அமைய காணியைப் பெற்று தொழில் முயற்சியை முன்னெடுத்த நிலையில் குறித்த காணியை அவருக்கு வழங்க வேண்டாம் எனவும் குறித்த காணியை மீளப்பெறுமாறு எனக்கு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்(பிள்ளையான்) அழுத்தங்களை வழங்கினார்.”என தெரிவித்துள்ளார்.