மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி
மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இன்று (13) பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நிலம் மற்றும் கடல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுகின்றது.
நாடு முழுவதும் உள்ள மீனவ சமூகங்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும். அதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முறையான ஆய்வை மேற்கொண்டதன் பின்னர் தொடர்ந்து அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்” என்றார்.
இதேவேளை, மன்னாரில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மீனவ சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது சுமார் 12,000 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதன்போது தெரியவந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்படாவிட்டாலும், சீரற்ற வானிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்களுக்கு சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்காக சீன தூதரகத்துடன் கலந்துரையாடுவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
யோத வாவி நீரேந்துப் பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குளங்களின் எல்லைகளில் கற்களை இடுவதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மன்னார் மாவட்டத்தில் 70 குடும்பங்கள் அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்துள்ளதுடன், அந்த வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இதற்கு தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்காக ஒரு குழுவை நியமித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உரிய காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் வசதிகளை விரிவுபடுத்துதல், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்காக திறைசேரியினால் வழங்கப்படும் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் பேரில் பிரதேச செயலாளர்கள் மூலம் விரைவாக வழங்கி நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் சேதமடைந்த பாதைகள் மற்றும் பாலங்களை நிர்மாணித்தல், நீர் வழங்கல் மற்றும் மின்சார விநியோகத்தை சீர்செய்தல், நீர்ப்பாசன கட்டமைப்புகளை புனரமைத்தல், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குதல் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.





