மியான்மரில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி
மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் திட்டத்திற்கு எதிராக ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 6 மணியளவில் வடமேற்கு சகாயிங் பகுதியில் உள்ள பாசிகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்புப் படை என்ற கிளர்ச்சிக் குழுவின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அருகில் இருந்த ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால் உயிரிழப்பு மேலும் அதிகரித்தது. கிளர்ச்சிப் படையினர் மற்றும் பொதுமக்களின் சடலங்கள் அந்த இடமெங்கும் சிதறிக் கிடக்கின்றன.
கொல்லப்பட்ட குழந்தைகள் நடன நிகழ்ச்சி நடத்த வந்திருந்தனர். கிராமத்தின் மீது ராணுவ விமானம் பறந்து நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் மீது குண்டுகளை வீசியது.
அதன்பிறகு, ஹெலிகாப்டர்கள் கிராமத்தை 20 நிமிடங்கள் தாக்கின. சிறிது நேரத்தில் இராணுவம் பின்வாங்கியது, ஆனால் மக்கள் இறந்த உடல்களுக்கு அருகில் வந்தபோது மீண்டும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது.
தாக்குதலை உறுதி செய்த ராணுவம், பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால், பயங்கரவாதிகளுக்கு உதவ வந்தவர்கள் என பதிலளித்தனர்.