மதுரோவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் இன்று (05) அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 03 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கையின் கீழ் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நியூயார்க்கிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத சதி, ஆயுதங்கள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க மாவட்ட நீதிபதி ஆல்வின் கே. ஹெல்லர்ஸ்டீன் தலைமையில் விசாரணைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





