பாதாள குழுக்களுக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் உறுதி!!

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்த விடயத்தில் பின்வாங்கப்போவதில்லை”என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும். ஒழுக்க விழுமியமுடைய சமூகமொன்று உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு நாம் உறுதியளித்துள்ளோம்.
அதற்கமைய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபட்டு பொலிஸார் தற்போது சுயாதீனமாக செயற்பட்டுவருகின்றனர்.
இவ்வாறு சட்டம் தமக்குரிய கடமையை செய்யும்போது சிலருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்தகையவர்களே கலக்கமடைந்து கத்துகின்றனர். எது எப்படி இருந்தாலும் பாதாளகுழு செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 30 ஆம் திகதி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது” என்றார்.