பழைய முறைமையில் தேர்தலை நடத்த தமிழரசுக் கட்சியும் பச்சைக்கொடி!
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
“ மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு அரசமைப்பில் மாகாணசபை முறைமை உள்ளது. அதனை அமுல்படுத்துவதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” எனவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டார்.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பழைய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியது.
இதற்கிடையில் இதற்குரிய சட்ட ஏற்பாட்டை செய்வதற்குரிய தனி நபர் சட்டமூலத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




