தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க ஆலோசனை
தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில், இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கூடிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இதில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
உயர்தரப் பரீட்சையின் பின்னர் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான வழிகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமானது எனக் குழுவின் தலைவர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெளிநாட்டுக்குச் சென்று உயர் கல்வியைப் பெற்றுக் கொள்வதால் பெருந்தொகையான அந்நியச் செலாவணி நாட்டுக்கு இழக்கப்படுவதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையில் இலங்கையில் சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்து வெளியிட்டனர். உயர் கல்விக்கான கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
தாதியர்களுக்கு வெளிநாடுகளில் பாரிய கேள்வி இருப்பதாகவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து அதிகமான தாதியர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் தாதியர்களுக்கு உரிய பட்டக்கல்வி மற்றும் பயிற்சியை வழங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அது மாத்திரமன்றி இவ்வாறு அனுப்பப்படும் தாதியருக்குத் தேவையான ஆங்கில மொழி அறிவை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.