துருக்கிக்கு 5 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்த சவுதி அரேபியா!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டின் மத்திய வங்கியில் 5 பில்லியன் டொலர்களை டெபாசிட் செய்தது சவூதி அரேபியா.
சவூதி அரேபியா திங்களன்று துருக்கியின் மத்திய வங்கியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.1,66,000 கோடி) டெபாசிட் செய்வதாகக் கூறியது.கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் சேதத்தை ஈடுகட்ட இத்தொகை ஒரு பெரிய ஊக்கமளிக்கும் என நம்பப்படுகிறது.
சவுதி சுற்றுலா அமைச்சரும், சவுதி ஃபண்ட் ஃபார் டெவலப்மென்ட்டின் வாரியத் தலைவருமான அஹ்மத் அல்-கதீப், துருக்கிய மத்திய வங்கி கவர்னர் சஹாப் காவ்சியோக்லுவுடன் கணிசமான $5 பில்லியன் டெபாசிட் செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று சவுதி அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த டெபாசிட் தொகை சவூதி அரேபியா மற்றும் துருக்கி குடியரசு மற்றும் அதன் சகோதர மக்களுக்கு இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் வரலாற்று உறவுகளுக்கு ஒரு சான்றாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துருக்கியின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் இந்த முடிவு, மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2018ம் ஆண்டு சவூதி பத்திரிகையாளரும் அரசாங்க விமர்சகருமான ஜமால் கஷோகி, இஸ்தான்புல் தூதரகத்தில் கொல்லப்பட்டதன் மூலம் உறவுகள் பலத்த அடியை சந்தித்த பின்னர், இப்போது சவூதியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நல்லுறவை எடுத்துக்காட்டுகிறது.