திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் பாதிப்பு!!
திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் இன்று (02) வரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்தார்.
கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் இன்று (02) காலை 7:00 மணி வரைக்கும் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 212 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலும் 6615 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 521 குடும்பம் தம்பலகாமம் பிரதேசத்தில் 450 குடும்பம் மொரவெவ பிரதேசத்தில் 135 குடும்பங்களும் 55 வீடுகளும் சேதமடைந்துள்ளது.
சேறுவில பிரதேசத்தில் 1094 குடும்பங்களைச் சேர்ந்த 3353 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 26 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதில் சமகிபுர மண்டலகிரி ரஞனா விகாரை , ஸ்ரீ வரதனராமய விகாரை மற்றும் ஆர் டி எஸ் கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் பிற்பாடு 1880 குடும்பங்களைச் சேர்ந்த 5607 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பூநகர் திருவள்ளுவர் மகா வித்தியாலயம், பூ மரத்தடி சேனை ஸ்ரீ வித்திவிநாயகர் வித்யாலயம், கருக்காமனை வித்தியாலயம், முத்துச் சேனை தமிழ் கலவன் பாடசாலை, அலை மகள் வித்யாலயம் கும்மியடி நாமகல் வித்யாலயம், துவாரகா வித்யாலயம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மூதூர் பிரதேசத்தில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் 22378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிண்ணியா பிரதேசத்தில் 5007 குடும்பங்களைச் சேர்ந்த 16, 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

மேலும் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் 304 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதவி சிறிபுர பகுதியில் 533 குடும்பங்கள் குச்சவெளி பிரதேசத்தில் 5732 குடும்பங்களை சேர்ந்த 19255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் திரியாய் தமிழ் வித்யாலயம் ,இரணைக்கேணி தமிழ் வித்யாலயம், நூரியா வித்தியாலயம் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 286 பேர் கந்தளாய் மகாவெலிபுர வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் மேலும் தெரிவித்தார்.
இருந்த போதிலும் மூதூர் தோப்பூர் கிண்ணியா பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும் உடைந்து காணப்படுகின்ற வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்






