கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு ரூபாய் 50,000 அபராதம்
கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது.
கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்து மர்ம நபர் வாளையார் எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி உள்ளார். இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் இது குறித்து கேட்டபோது அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார். இதை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியதை அடுத்து அந்த நபர் மீண்டும் கோழி கழிவுகளை ஆட்டோவில் எடுத்துச் சென்றார். இதனிடையே இதுகுறித்து கே.ஜி சாவடி போலீசாருக்கு இளைஞர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து வாகனத்தில் கோழி கழிவுகளை எடுத்து வந்து வாளையார் எல்லையில் கொட்டிய கேரளா மாநிலம் திருச்சூர் சேர்ந்த ராஜு என்பவருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.