‘கோல்டன் டோம் ‘திட்டம் : அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைக்கும் டிரம்பின் இலவச வாய்ப்பை நிராகரித்த கனடா

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க 175 பில்லியன் டாலர் மதிப்பிலான ’கோல்டன் டோம்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். ”இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைப்பதுடன், சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த லட்சிய பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
தவிர, ”இந்த ‘கோல்டன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பை, சுதந்திர நாடாகவே இருந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், கனடாவுக்கு 61 பில்லியன் டாலர்கள் ஆகும். அல்லது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைந்துகொண்டால், இந்த பாதுகாப்பு அமைப்பு முழுக்க இலவசமாகவே கிடைத்துவிடும்” எனத் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்பின் இந்தக் கோரிக்கையை, கனடா பிரதமர் மார்க் கார்னி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து கனடா அரசு, “கனடா, ஒரு பெருமைமிக்க, சுதந்திர நாடு. அதன் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை” என அது தெரிவித்துள்ளது.
கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மார்க் கார்னி, சமீப காலமாக அமெரிக்காவையும் ட்ரம்பையும் கடுமையாகச் சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்பை, கடுமையாக விமர்சித்ததாலேயே அவர் கனடா தேர்தலில் பெருத்த வெற்றியைப் பெற்றிருந்தார் என்பது தேர்தல் கணிப்பாளர்களின் கருத்தாக உள்ளது.