கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும்
கொரோனா நோய் தொற்றை தடுக்க அனைத்து விதமான கண்காணிப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும் சூழலில் கோவையில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனாவினால் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடுமானால் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ ரீதியாக எப்படி கையாள
வேண்டும் என்பதற்கான ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையில் இந்த ஒத்திகை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்று முன்னேற்பாடு மற்றும் கையாளுதல் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பார்வையிட்டார்.
இந்த ஒத்திகையில் Rtpcr test மாதிரி,
ஆக்ஸிஜன் பரிசோதனை
டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் காய்ச்சல் பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த ஒத்திகையில் 15 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தொற்று நோயாளிகளை எவ்வாறு காப்பது உள்ளிட்ட
ஒத்திகை நிகழ்ச்சி தற்போது கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருவதாகவும் அதனை தான் பார்வையிட்டதாகவும் கூறினார். இதுபோன்ற ஒத்திகை நிகழ்வை அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.
நோய் தொற்று அறிகுறி என்பது கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 113ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நோய் தொற்று தடுக்க அனைத்து விதமான கண்காணிப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து விதமான மருத்துவ கட்டமைப்புகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.