கிளிநொச்சியில், முன்னாள் போராளிகள் TID யினரால் விசாரணை
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்னாள் போராளிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
விவேகானந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான திரு.அமாவாசை மதிவண்ணன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளரும், கனகபுரம் மாவீரர் பணிக்குழுவின் செயலாளருமான திரு.வீரவாகு விஜயகுமார், உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த, கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தங்கவேலு கண்ணபிரான், இரத்தினபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான திரு.சிவப்பிரகாசம் ஜெயதீபன் ஆகியோரே அண்மைய நாட்களில் பரந்தனிலும், இரணைமடுவிலுமுள்ள TID அலுவலகங்களுக்கு அழைக்கப்பட்டு பலமணிநேர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெற்று, நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டியுள்ள நெருக்கடி நிலையிலும் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக சமூகமயப்பட்டு வாழும் முன்னாள் போராளிகளும், தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும், சமூகநலப் பணிகளில் ஈடுபடுவோரும் இன்னமும் அச்சம் மிகுந்த சூழலிலேயே இந்த நாட்டில் தமது வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றார்.