கிரிப்டோவுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி! 48 நாடுகளின் அதிரடி ஒப்பந்தம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சுகள் (Cryptocurrency exchange) மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வர்த்தக விவரங்களை அந்தந்த நாட்டு வரி அதிகாரிகளிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) உருவாக்கிய கிரிப்டோ சொத்து அறிக்கை கட்டமைப்பு (CARF – Cryptoasset Reporting Framework) என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், கனடா, பிரேசில் உள்ளிட்ட 48-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தத் தகவல்களைத் தானாகவே (Automatically) தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
இதன் மூலம், ஒரு நாட்டின் கிரிப்டோ முதலீட்டாளர் மற்றொரு நாட்டின் எக்ஸ்சேஞ்சைப் பயன்படுத்தினாலும், அவரது விவரங்களை வரி அதிகாரிகள் எளிதாகக் கண்டறிய முடியும்.
மேலும் இனி கிரிப்டோ நிறுவனங்கள் பின்வரும் தகவல்களைச் சேகரித்து வரித் துறைக்கு (உதாரணமாக பிரிட்டனில் HMRC) வழங்க வேண்டும்.
அதாவது முதலீட்டாளரின் முழுப் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி.
வரி அடையாள எண் (TIN/NI Number):அந்தந்த நாட்டின் வரி எண்.
மேலும் கிரிப்டோ (Crypto) வை வாங்கிய விலை, விற்ற விலை, லாபம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் செய்யப்பட்ட விவரங்கள் வழங்கவேண்டும் .
இதை பின்பற்றாது விவரங்களைச் சரியாக வழங்காத அல்லது தவறான தகவல்களைத் தரும் பயனர்களுக்கு £300 (சுமார் ₹33,000) வரை உடனடி அபராதம் விதிக்கப்படலாம்.
கடந்த 2024-25 நிதியாண்டில் கிரிப்டோ மூலம் லாபம் ஈட்டியவர்களுக்கு ஏற்கனவே வரித் துறையினர் ஆயிரக்கணக்கான ‘எச்சரிக்கை கடிதங்களை’ (Nudge Letters) அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
மேலும் இந்தியா தற்போதைக்கு CARF ஒப்பந்தத்தில் முழுமையாக இணையவில்லை என்றாலும், உள்நாட்டில் ஏற்கனவே கிரிப்டோ (Crypto) லாபத்திற்கு 30% வரி மற்றும் 1% TDS முறையைப் பின்பற்றி வருகிறது. இருப்பினும், சர்வதேச அளவில் கிரிப்டோ (Crypto) பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படுவதால், வெளிநாட்டு எக்ஸ்சேஞ்சுகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களும் விரைவில் கண்காணிப்பு வளையத்திற்குள் வர வாய்ப்புள்ளது என தெரியவருகிறது.





