காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல மனு
கனிம வள கொள்ளையை கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு- பாஜக மாநில விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ்.
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி பாஜக விவசாய அணி சார்பில், மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
அவர்கள் அளித்த மனுவில், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் விளை நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக சுட்டுக் கொல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். யானை,மயில், மான் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வனத்தை வளப்படுத்தும் முயற்சியில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.நாகராஜ், கிணத்துக்கடவு பகுதியில் கனிமவளக் கொள்ளை அதிகமாக உள்ளது எனவும் இதனைக் கண்டித்து சுமார் பத்தாயிரம் பேர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதற்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். இதனை பரிசளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என கூறினார். கேரளாவில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு கழிவுகள் கோவையில் கொட்டப்படுவதாகவும், அதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார். மேலும் காட்டுப்பன்றிகளை துப்பாக்கிகளைக் கொண்டு கட்டுப்படுத்துவதற்கு அனுமதி கேட்டு முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். அன்னூர், தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் ஐந்து லட்சம் வாழை மரங்கள் சூறைகாற்று கனமழை காரணமாக சாய்ந்துள்ளதாக தெரிவித்த அவர், மாவட்ட நிர்வாகம் ஏக்கர் கணக்கில் கணக்கிட்டு குறைந்த அளவு நிவாரணம் தராமல் ஒவ்வொரு மரத்திற்கும் கணக்கெடுத்து நிவாரணம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பயிர் காப்பிடுதலில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளதாக தெரிவித்த அவர் தோட்டக்கலை துறை மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறினார். தேங்காய்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்த அவர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிறுவாணி உட்பட சில அணைகளில் தூர்வாரப்படாமல் இருக்கிறது என கூறிய அவர் அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசாங்கத்தின் உதவி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என தெரிவித்த அவர் விவசாயம் செய்வதற்கு அரசு உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.