கண்ணன் வருவான்
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென சாஷ்டாங்கமாக விழுந்து ஸேவித்தான். உதட்டில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமென இரண்டும் கலந்த உணர்வில், மூன்று பேரும் இருந்தார்கள்.
இந்தப் பத்து வருடங்களில், எத்தனை முறை சிரித்திருப்பாய்? எத்தனைப் பேரை உன்னுடைய குறும்புகளால் சிரிக்க வைத்திருப்பாய்? உன்னையும் உன் அழகையும் பார்த்ததில், எத்தனை பேரின் துக்கங்கள் பறந்தோடியிருக்கும்? ஆனால், வெளியில் சிரித்துக்கொண்டு, குறும்புகள் செய்து வலம் வந்தாலும், நீ உள்ளுக்குள் அழுதாய் அல்லவா! பெற்றோரைப் பிரிந்திருக்கிற வேதனையில் கதறினாய்தானே?! உள்ளுக்குள் நீ அழுத அழுகையை எவர் அறிவார்? கீதையில், அர்ஜுனனிடம்… ”என்னுடைய ஆதங்கமெல்லாம், என்ன பிறந்து என்ன… என்னை எவரும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையே என்பதுதான்! 700 ஸ்லோகங்கள் கேட்ட நீயே என்னைப் புரிந்துகொள்ளாதபோது, மற்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?” என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
சாரதியாக, தூதனாக, கையாளாக என்று எத்தனை இறங்கி வந்து பணி செய்திருக்கிறான் ஸ்ரீகண்ணன்! அவனைப் புரிந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தால்… நமக்காகவும் வருவான் ஸ்ரீகண்ணன். அழகுக் கண்ணனை ஆராதியுங்கள்; தூதனாக, கையாளாக, சாரதியாக உங்கள் வீட்டுக்கும் வருவான் ஸ்ரீகண்ணன்