ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சராக அபாஸ் அராக்சி என்பவர் நியமனம்
ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சராக அபாஸ் அராக்சி என்பவரை அந்நாட்டு அதிபர் மசுத் பெஸஸ்கியன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11ஆம் திகதி) அன்று நியமித்துள்ளார்.இதை ஈரான் நாட்டு நாடாளுமன்ற நாயகர் அந்நாட்டின் ‘ஸ்டுடண்ட் நியூஸ் நெட்வொர்க்’ என்ற ஊடகத்தளத்தில் அறிவித்தார்.
“நாளை முதல் அடுத்த வாரக் கடைசிவரை நாடாளுமன்ற அமைப்புகள் அமைச்சர்களாக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் திட்டங்களை பரிசீலிக்கத் தொடங்கும்,” என்று நாடாளுமன்ற நாயகர் முகம்மது பாக்கர் கலிபஃப் தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் பெஸஸ்கியனின் அமைச்சரவைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள திரு அராக்சி அனுபவமிக்க அரசதந்திரி என்று கூறப்படுவதுடன் இவர் 2013ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை ஈரான், உலக வல்லரசுகளுக்கு இடையிலான அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பின்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஈரானியத் தூதராகப் பணியாற்றியுள்ளார் என்றும் ஆசிய-பசிபிக் வட்டாரத்துக்கான ஈரானின் துணை வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.