இலங்கை அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் பிரச்சினை – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து பிரதமர் மோடியின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது எனது கடமை.
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை நான் பெற்றுள்ளேன்.
இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர். பலர், இதனை தங்கள் சமூகத்துக்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன. இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது.
உள்நாட்டுப் போர் நிறைவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருகிறது.
அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான, நாடாளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.
இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி “எக்கியராஜ்ய” (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது.
இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் (Thimpu Principles) குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும். ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.





