இலங்கையில் தேடப்படும் நபர் பிரான்சில் கைது
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வாவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான “குடு அஞ்சு” என அழைக்கப்படும் சிங்கரகே சமிந்த சில்வா, பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச பொலிஸார் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உட்பட பல கொலைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குடு அஞ்சு என அழைக்கப்படும் சிங்கரகே சமிந்த சில்வா அண்மையில் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.
அவர் பல்வேறு நாடுகளில் வசிப்பதாக இந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்குத் தகவல்கள் கிடைத்த போதிலும், அவர் பிரான்ஸில் வசிப்பதாக இறுதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
குடு அஞ்சு ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தலைமறைவாக இருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
அதன் பிரகாரம் சர்வதேச பொலிஸார் கைது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அதன்படி எதிர்காலத்தில் அவரை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
2018 ஆம் ஆண்டு, கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தைரஞ்சன் சில்வாவின் கொலையில் சந்தேக நபராக “குடு அஞ்சுவா” பெயரிடப்பட்டார்.
அங்குலான பிரதேசத்தில் லக் மந்துர ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சமிந்த சில்வா அல்லது குடு அஞ்சு மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.