இந்தியாவில் பரவும் புதியவகை வைரஸ் : மக்களுக்கு எச்சரிக்கை!
இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் எச்.3 என்.2 வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு 99 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் இந்த வைரஸ் வந்து மக்களை வாட்டி வதைத்தது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ்கள் பரவி இருப்பதை கண்டறிந்தனர். எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
இதில் வட மாநிலங்களில் எச்.3 என்.2 வைரசும், தமிழகத்தில் எச்.1 என்.1 வைரசும் அதிகளவில் பரவி இருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே எராளமானவர்கள் என்ன வகை வைரஸ் தாக்கி இருக்கிறது என்று தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக ஒமைக்ரான் மரபணு மாற்றத்துக்குள்ளான வைரஸ்களின் மரபணுக்கள் மீண்டும் ஆய்வு செய்யப் பட்டன.
அந்த பகுப்பாய்வில் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரஸ் தொற்றுதான் சமீப காலமாக பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் எக்ஸ்.பி.பி. வைரசின் மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அவை எக்ஸ்.பி.பி.1 மற்றும் எக்ஸ்.பி.பி. 1.16 என்றும் உருமாற்றம் பெற்றுவிட்டன. கடைசியாக கண்டறியப் பட்ட எக்ஸ்.பி.பி.1.16 ரகத்துக்கு சமீபத்தில்தான் பெயர் சூட்டப்பட்டது. இது சற்று வேகமாக பரவக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் இந்த வைரஸ்கள் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.