இதய நோய், மாரடைப்பை ஏற்படுத்தும் மிக ஆபத்தான 3 தீய பழக்கங்கள்

மாரடைப்பு இதய நோய் ஆகியவை, வயதானவர்களை தாக்கிய காலம் மலை ஏறிவிட்டது. இப்போது இளைஞர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 20 அல்லது 30 வயதுகளில் உள்ள இளைஞர்கள் கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் அதிர்ச்சி சம்பவங்களை, அடிக்கடி செய்தித்தாள்களில் கேள்விப்படுகிறோம்.
உடலை நோய்களின் கூடாரமாக மாற்றும் தீய பழக்கங்கள்
கடந்த சில காலங்களாக, ஏற்பட்டு வரும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் நலனை பெரிதும் பாதித்துள்ளன என்பதை மறுக்க இயலாது. சரியான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுக்கும். அதே சமயத்தில் சில தீய பழக்கங்கள் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிவிடும். அந்த வகையில், மாரடைப்பு அபாயத்தை எகிற வைக்கும், மிக முக்கியமான மூன்று தீய பழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தாமதமாக தூங்கும் பழக்கம்
இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் மாணவர்கள் என பலரும், நள்ளிரவு வரை விழித்திருந்து, அதிகாலை அதிக நேரம் தூங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். நெடு நேரம் கணினி அல்லது மொபைலில் படங்களை பார்ப்பது, சமூக ஊடகங்களில் உலாவுவது என நேரத்தை செலவிடுவதால், சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் பழக்கம் என்பது அரிதான பழக்கமாக மாறிவிட்டது. இது மாரடைப்பு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கும் என்று, இருதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவை தவிர்க்கும் பழக்கம்
இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், பலருக்கு சரியான நேரத்தில் சாப்பிட நேரமே இருப்பதில்லை. நேரமில்லை என்பதை காரணம் காட்டி, பசிக்கும் நேரத்தில் ஒரு டீ பிஸ்கட்டை சாப்பிடும் பலரை பார்க்கலாம். இதனால் உடல் ஆரோக்கியம் பெரிதளவு பாதிக்கப்படுகிறது. அதோடு தாமதமாக எழுவதால், காலை உணவு சாப்பிட நேரமில்லை என்று கூறி, உணவை தவிர்த்து விட்டு, மதிய நேரத்தில் தான் உண்கின்றனர். இதனால் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதோடு, இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயங்கள் பெருமளவு அதிகரிக்கின்றன எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிக்கும் வழக்கம்
பொதுவாகவே இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதை காணலாம். எப்போது சிகரெட் அது ஆரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும். நுரையீரலை பலவீனப்படுத்தி, சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க காரணமாகிறது. அதிலும் காலையில் எழுந்தவுடன், ஒன்றும் சாப்பிடாமல் சிகரெட் பிடிப்பதால், மாரடைப்பு மற்றும் இதய பிரச்சினைகள் மிகவும் அதிகரிக்கும் என்று, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பு அபாயத்தை தடுக்க கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
1. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், நோயற்ற வாழ்வை வாழலாம். இந்நிலையில், மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க கீழ்க்கண்ட விஷயங்களை தவறாமல் கடைப்பிடிப்பது அவசியம்.
2. ஆரோக்கியமான மற்றும் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவை சாப்பிடும் பழக்கம், நோயற்ற வாழ்வை பெற உதவும். அதிலும், நாள் முழுவதற்குமான ஆற்றலை கொடுக்கும் காலை உணவு மிகவும் முக்கியம்.
3. உடல் நலம் சிறப்பாக இருக்க, நாள் ஒன்றுக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் அவசியம்.
4. உடலின் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
5. தினமும் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சியை மேற்கொள்வது சிறப்பு. அதற்கு சாத்தியம் இல்லை என்றால், வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அதோடு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், படிகளில் ஏறி இறங்குதல், அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து செல்லுதல், தொலைபேசியில் பேசும்போது நடந்து கொண்டே பேசுதல் போன்ற சிறு சிறு பழக்கங்கள், உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண உதவும்.
6. மதுபானம் அருந்துதல் மற்றும் சிகரெட் பழக்கத்தை முற்றிலும் கை விடுவது நல்லது.
7. மன அழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக உள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த யோகா தியானம் போன்ற பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவது பலனளிக்கும்.