அமெரிக்கா தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து பெலாரஸ் 123 கைதிகளை விடுவித்தது
கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் மீது விதிக்கப்பட்ட சில தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பெலாரஸ் அரசு 123 கைதிகளை விடுவித்துள்ளது.
விடுவிக்கப்பட்டவர்களில் பிரபல எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் மரியா கோல்ஸ்னிகோவாவும் அடங்குகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெலாரஸுக்கான சிறப்பு தூதுவர் ஜான் கோலுடன் மின்ஸ்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இந்த விடுவிப்பு இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கியும் விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.
பெலாரஸின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகவும், உர உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளாகவும் இருக்கும் பொட்டாஷ் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் போது, மேலும் தடைகள் நீக்கப்படும்,” என்று அமெரிக்க தூதுர் ஜான் கோலே தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ஜனாதிபதியாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 முதல் சிறையில் இருந்த மரியா கோல்ஸ்னிகோவா, பெரும்பாலும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்த அவரது சகோதரி டாட்டியானா கோமிச், காணொளி அழைப்பு மூலம் அவருடன் பேசியதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.
விடுவிக்கப்பட்ட கைதிகள் குழு விரைவில் லிதுவேனியாவின் தலைநகர் வில்னியஸை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே மக்கள் கூடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் லுகாஷென்கோவிற்கு ஒரு முக்கிய அரசியல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல்களுக்குப் பிறகு, பெலாரஸ் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள் கடுமையாக இருந்தன.
2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது, பெலாரஸ் வழியாக ரஷ்ய படைகள் நுழைந்ததையடுத்து மேற்கத்திய தடைகள் மேலும் தீவிரமடைந்தன.
பொட்டாஷ் மீதான தடைகள் உடனடியாக நீக்கப்படும் என பெலாரஸ் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், உக்ரைன் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பெலாரஸ் எவ்வாறு உதவ முடியும் என்பதையும் அமெரிக்க தூதுவர் லுகாஷென்கோவுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
பெலாரஸுடன் உறவுகளை மீண்டும் அமைப்பதற்கான இந்த முயற்சி, அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது, தடைகள் மற்றும் தனிமைப்படுத்தலை தொடரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதாகும்.





