முன்னாள் காதலன் கொடுத்த கல்யாண பரிசு ; திருமணமான மறுநாளே கணவனை இழந்த பெண்!
திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்துச் சிதறி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவத்தில், மணப்பெண்னின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தில் திருமணப் பரிசாகப் பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் செருகப்பட்ட உடனேயே வெடித்து சிதறியதில் புதிதாகத் திருமணமான ஒருவரும் அவரது சகோதரரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தில் மேலும் புதிதாகத் திருமணமான பெண் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.ஹோம் தியேட்டர், வெடிமருந்துகளால் நிரப்பட்டிருந்ததும், மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கொடுத்த பரிசு என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தின் தாக்கத்தால் ஹோம் தியேட்டர் அமைப்பு வைக்கப்பட்டிருந்த அறையின் சுவர்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்தன. 22 வயதான ஹேமேந்திரா மெராவி என அடையாளம் காணப்பட்ட புது மாப்பிள்ளை, ஹோம் தியேட்டர் சிஸ்டத்தின் வயரை எலக்ட்ரிக் பேண்டுடன் இணைத்த பிறகு, ஒரு பாரிய வெடிப்பு ஏற்பட்டதில், மேராவி சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக பொலிஸார் தெரிவித்தனர். மறுபுறம், அவரது சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், ஹோம் தியேட்டர் பெட்டிக்குள் யாரோ வெடிமருந்துகளை வைத்ததால் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர், திருமணத்தின் போது கிடைத்த பரிசுகளின் பட்டியலை பொலிஸார் விசாரிக்கத் தொடங்கியபோது, மியூசிக் சிஸ்டம் மணமகளின் முன்னாள் காதலரின் பரிசு என்பதைக் கண்டுபிடித்தனர்.குற்றம் சாட்டப்பட்டவர் சர்ஜு என அடையாளம் கண்ட பொலிஸார், பின்னர் அவரை கைது செய்தனர்.
கபீர்தாம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனிஷா தாக்கூர் கூறுகையில், விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர், தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்டதற்காக கோபமாக இருந்ததாகவும், எனவே அவர் ஹோம் தியேட்டர் அமைப்பை பரிசாக கொடுத்தார் என்பதாகியும் ஒப்புக்கொண்டார்.
பொலிஸாரின் தகவலின்படி, ஹேமேந்திரா மெராவி ஏப்ரல் 1 அன்று திருமணம் செய்து கொண்டார். அவரது சகோதரர் ராஜ்குமார் (30) மற்றும் ஒன்றரை வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர், அவர்கள் கவுரதாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.