போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும் கூகுள் மேம்ஸ்!
நாம் பயணம் மேற்கொள்ளும் போது, வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது சாலையில் செல்லும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம்.
ஆனால் அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம்.
அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ் (Google Maps), பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில், ஓலா நிறுவனம் கூகுள் மேப்பிற்கு குட்பை சொல்லிவிட்டு, தனது சொந்த தயாரிப்பான ஓலா மேப்புகளை பயன்படுத்துவதாக ஓலா நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து, கூகுள் நிறுவனம் இந்திய பயனர்களை கவரும் வகையில் பல புதிய அம்சங்களை அறிவித்தது.
அதில் மேம்பாலங்கள் குறித்த தகவல்கள், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சிக்கலை சந்திக்காத வண்ணம் குறுகிய சாலைகள் குறித்த தகவல்களை அளித்தல் போன்றவற்றை சில அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில், லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் (Live Traffic Updates) என்னும் புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும். இந்த சிறப்பு அம்சத்தின் உதவியுடன், எந்தெந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, எந்த வழித்தடங்களை தவிர்த்தால் எளிதில் இலக்கை சென்று அடையலாம் என்பதை பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.
லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சத்தை பயன்படுத்தும் முறை:
1. முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள Google Map என்ற செயலியை திறக்கவும்
2. கூகுள் மேப்ஸின் செட்டிங் பிரிவுக்கு சென்றால் டிராபிக் என்ற ஆப்ஷனை காணலாம்.
3. அதில் சென்று லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் என்பதை ஆன் செய்யலாம்.
லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சத்தினால் கிடைக்கும் நன்மைகள்
டிராபிக் அப்டேட்ஸ் கிடைப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை தவிர்த்து, நாம் செல்ல வேண்டிய இடத்தை விரைவாக அடையலாம். இதனால் நமது பயணத்தை சிறப்பாக திட்டமிடலாம். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
கூகுள் மேப்ஸ் இன் இந்த ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சத்தின் மூலம், நெரிசல் அல்லாத சிறந்த வழியை கண்டறியலாம் என்பதோடு, பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த அம்சத்தின் உதவியுடன் பேருந்து அல்லது ரயில் அட்டவணை குறித்த தகவல்களையும் அறியலாம். நீங்கள் நடந்து சென்றாலும் அல்லது சைக்கிள் மூலம் பயணித்தாலும் கூட இந்த அம்சத்தின் உதவியுடன், விரைவாக சென்றடையும் வழி என்பதை கண்டறியலாம்.
கூகுள் மேப்ஸின் லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சம், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும் மிகவும் பயனுள்ள அம்சம் என்று கூறலாம். தினமும் பயணம் செய்பவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது.