புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்க துரித நடவடிக்கை – பிரதமர் உறுதி!
புதிய பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பது தொடர்பில் விரைவான தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து இன்று (ஜூலை 07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டாவது தடவையாகவும் நீடிக்கப்படலாம் என வட்டாரங்கள் கூறுகின்ற பின்னணியில் பிரதமரின் இந்த அறிக்கை வந்துள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, தேசபந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் இதுவரை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.