பாரிஸில் ‘X’ அலுவலக சோதனை: அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி (இன்று), பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவு (J3 Unit), ஐரோப்பிய காவல்துறையான (Europol) உதவியுடன் பாரிஸில் உள்ள ‘X’ நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டுள்ளது. இது கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் தீவிர விசாரணையின் ஒரு முக்கிய கட்டமாகும்.
இந்தச் சோதனை திடீரென நடத்தப்பட்டதல்ல; இதற்குப் பின்னால் பல வலுவான சட்டக் காரணங்கள் உள்ளன:
‘X’ தளத்தின் அல்காரிதம் முறைகேடு (Algorithm Abuse) வெறுப்புப் பேச்சு (Hate speech) மற்றும் இனவாதக் கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்ப உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயகச் செயல்பாடுகளைச் சிதைக்கும் வகையில் வெளிநாட்டு சக்திகள் இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதை ‘X’ நிறுவனம் அனுமதித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்தப்புகாரை தொடர்ந்து பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் அந்தத் தளத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இனிமேல் அவர்கள் LinkedIn மற்றும் Instagram வாயிலாகவே தகவல்களைப் பகிரப்போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் பயனர்களின் தகவல்களை முறையற்ற வகையில் கையாண்டது மற்றும் தரவுகளைத் திருடியது (Fraudulent Data Extraction) தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.
மேலும் எலான் மஸ்க்கின் க்ரோக் ஏஐ (Grok AI) சாட்பாட், யூதப் படுகொலை (Holocaust) போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பியதும் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லது சிறார்களின் ஆபாசப் படங்களை வைத்திருப்பது (Child Pornography) மற்றும் அதை ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டுப் பரப்புவதற்கு (Organised distribution) உடந்தையாக இருந்தது.
தனிநபர்களின் அனுமதியின்றி அவர்களின் உருவத்தைப் பயன்படுத்தி பாலியல் ரீதியான ‘டீப்ஃபேக்’ வீடியோக்கள் (Sexual Deepfakes) மற்றும் படங்களை உருவாக்கியதன் மூலம் அவர்களின் உருவ உரிமைகளை (Image Rights) மீறியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைச் சட்டம் (Digital Services Act – DSA) என்பது ஆன்லைன் தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு சட்டமாகும். இதை ‘X’ நிறுவனம் முறையாகப் பின்பற்றாததால், 2025 டிசம்பரில் ஐரோப்பிய ஆணையம் ‘X’ நிறுவனத்திற்கு 120 மில்லியன் யூரோக்கள் (சுமார் ₹1,100 கோடிக்கு மேல்) அபராதம் விதித்தது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, எலான் மஸ்க் ( Elon Musk) மற்றும் ‘X’ நிறுவனத்தின் முன்னாள் CEO லிண்டா யாக்காரினோ ( Linda Yaccarino) ஆகியோரை வரும் ஏப்ரல் (2026) மாதம் நேரில் ஆஜராகுமாறு பாரிஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் பிரான்ஸ் அதிகாரிகளின் விசாரணைக் கோரிக்கைகளுக்கு ‘X’ நிறுவனம் முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த விசாரணைகள் அனைத்தும் “அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என்றும், இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் எலன் மஸ்க் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் தனது நிறுவனம் சட்டப்படி செயல்படுவதாகவும், அதிகாரிகளின் தேவையற்ற தலையீடுகளை எதிர்க்க தங்களுக்கு உரிமை உண்டு என்றும் ‘X‘ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாரிஸ் காவல்துறை தற்போது ‘X’ அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், கணினிகள் மற்றும் தரவுப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பெரும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த விசாரணையில் பாரிஸ் காவல்துறை, பிரான்ஸ் நாட்டு சைபர் பிரிவு (UNCyber) மற்றும் ஐரோப்பிய காவல்துறை (Europol) ஆகியவை இணைந்து இந்தச் சோதனையை நடத்தி வருகின்றன. ‘X’ நிறுவனம் பிரான்ஸ் நாட்டு சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




