கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்?
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்க வரைவிகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மையில் பேருவளை கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அவர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து மேலதிக தரவுகள் பெறப்பட வேண்டியிருப்பதால், அப்பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகளை இலக்கு வைத்து நிறுவ வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது பல்லேகல, மஹகனதரவ, புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் நில அதிர்வு அளவீடுகள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அண்மையில் விக்டோரியா அணைக்கட்டுக்கு அருகில் பல நிலநடுக்க வரைவிகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும், இத்தகைய நிலநடுக்க வரைவிகள் நாட்டின் மேற்குப் பகுதியில் நிறுவப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் பிரதான வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இருந்து தரவுகளை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.