ஐரோப்பாவின் எரிசக்தி உள்கட்டமைப்பை பாதுகாக்க அழைப்பு!
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டர்லையன், மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகிய இருவரும் ஐரோப்பாவின் எரிசக்தி உள்கட்டமைப்பின் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகளை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
நோர்வே கடற்கரையில் உள்ள நாட்டின் மிகப்பெரிய எரிவாயு தளமான ட்ரோல் ஏ இல் செய்தியாளர் சந்தித்த அவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இயற்கை எரிவாயு விநியோகத்தை குறைப்பதன் மூலம் ஐரோப்பாவை அச்சுறுத்துவதற்கு ரஷ்யா முயற்சிப்பதாக குறிப்பிட்ட வோன்டர் லயன், கடினமான நேரத்தில் நார்வே தனது எரிவாயு உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இயற்கை எரிவாயு உற்பத்தியை 78 பில்லியன் கனமீட்டரிலிருந்து 90 பில்லியன் கனமீட்டராக அதிகரிப்பதன் மூலம் முக்கியமான நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவியதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கடந்த ஒரு வருடத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவிற்கும் நோர்வேக்கும் இடையில் தீவிர ஒத்துழைப்பும் தொடர்பும் இருந்ததை சுட்டிக்காட்டிய அவர் அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு வழங்கலை உயர் மட்டத்தில் பேணுவதை தமது நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என ஜென்ஸ் ஸ்டோல்டன் பேர்க் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.