உலக வங்கி மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடல்!
பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உலக வங்கி மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால கூட்டம் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் இலங்கை சார்பில் கலந்து கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க , மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் வாஷிங்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து இடம்பெற்ற சந்திப்புக்களின் போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கான அர்ப்பணிப்பு என்பவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.