உக்ரைனில் ரஷ்யா பலவிதமான போர்க்குற்றங்கள் புரிந்துள்ளதாக ஐ.நா விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய அதிகாரிகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் அத்துமீறல்களை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புகள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள். முறையான பரவலான சித்திரவதைகள்,பொதுமக்களை புறக்கணிப்பதை காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டமை, சட்டவிரோத சிறைப்பிடிப்பு, சித்திரவதை, கற்பழிப்பு, பிற பாலியல் வன்முறைகள், மற்றும் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடுகடத்தியதும் இதில் குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்ய படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பகுதிகளில் வேண்டுமென்றே மக்களை கொலை செய்ததாகவும், உரிய அறிவிப்புகள் இன்றி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக எரிசக்தி கட்டமைப்பு மீதான தாக்குதல் அப்பாவி மக்களை இருளில் தவிக்கவிட்டதாகவும், உக்ரேனிய மொழி பேசுபர்களுக்கு எதிராக தண்டனை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய கூட்டமைப்பின் தேசிய கீதத்தின் வரிகளை மறந்தமைக்காக முன்னாள் கைதி ஒருவர் தாக்கப்பட்டதும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.