ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000 பேர் நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெறுவார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருப்பவர்கள் பத்து வருட துயரங்களை அனுபவித்துள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏனைய 12000 குடியேற்றவாசிகளின் நிலை என்னவென இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் பல வருடங்களாக காத்திருக்கின்றோம் எதிர்காலமேயில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அலி என்ற புகலிடக்கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
அதோடு தன்னுடன் படகில் வந்த பலருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் ஆனால் தனக்கும் இன்னும் சிலருக்கும் பிரஜாவுரிமை கிடைக்கவில்லை எனவும் கவலை வெளியிட்டார். மேலும் 133 பேரில் ஐந்துபேரை நவ்வுறுவிற்கு மாற்றினார்கள் ஐந்து வருடம் அங்கு துயரங்களை துன்பங்களை அனுபவித்தோம் ஆனால் இங்கு வந்தும் அது மாறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.