அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு!
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 9
மாதங்களாக எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்டவிதியாகும்.
இதை தொடர்ந்து பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாளை மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 21 ஆம் திகதி கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.