பேபி ஏபி ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த மேக்ஸ்வெல்!
தென்னாப்பிரிக்காவின் 22 வயது இளம் பேட்ஸ்மேன் டிவால்ட் ப்ரெவிஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் (ஆகஸ்ட் 16, 2025) தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்தார்.
இரண்டாவது டி20யில் 56 பந்துகளில் 125 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) அடித்து, தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச டி20 ஸ்கோரைப் பதிவு செய்தார். மூன்றாவது போட்டியில் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், ப்ரெவிஸின் திறமையைப் பாராட்டி, “அவரது பேட்டிங் தூய்மையானது, ஆட்டத்தில் நிலைத்தால் தடுப்பது கடினம், இவரை போல விளையாடுவது கொஞ்சம் கஷ்டம் ” என்று கூறினார்.
2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் ப்ரெவிஸின் ஆட்டம், ஏபி டி வில்லியர்ஸை ஒத்திருந்ததால், அவருக்கு ‘பேபி ஏபி’ என்ற பட்டம் கிடைத்தது. “இந்தப் பட்டம் ஆரம்பத்தில் பெரும் அழுத்தமாக இருந்தது. அவர் விரைவாகவே தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றார்,” என்று மெக்ஸ்வெல் தெரிவித்தார். 2023-ல் டி20 அறிமுகமான ப்ரெவிஸ், அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. “அவர் கடினமாக உழைத்து, இப்போது அற்புதமாக விளையாடுகிறார்,” என்று மெக்ஸ்வெல் பாராட்டினார்.
மேலும், நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் 2.2 கோடி ரூபாய்க்கு இணைந்த ப்ரெவிஸ், 6 போட்டிகளில் 225 ரன்கள் (37.50 சராசரி, 180 ஸ்ட்ரைக் ரேட்) அடித்து, அணியின் பேட்டிங்கை பலப்படுத்தினார். இது அவருக்கு தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் இடம் கிடைக்க உதவியது. CSK-யின் ஒப்பந்தம் குறித்து அஷ்வின் “கூடுதல் பணம்” என்று கருத்து தெரிவித்து சர்ச்சை எழுப்பினாலும், CSK விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாக தெளிவுபடுத்தியது.
அதே சமயம், மேக்ஸ்வெல், மூன்றாவது டி20யில் ப்ரெவிஸை 53 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து, ஆஸ்திரேலியாவின் 2-1 தொடர் வெற்றிக்கு உதவினார். ஆனால், “ப்ரெவிஸின் திறமை அபரிமிதமானது. அவர் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவார்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். ப்ரெவிஸின் இந்தப் பயணம், உலக கிரிக்கெட்டில் அவரை ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக நிலைநிறுத்தியுள்ளது.





