பாகிஸ்தான் சிறையில் இருந்து முக்கிய குற்றவாளிகள் குழு தப்பியோட்டம்
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள ராவல்கோட் சிறையில் இருந்து பயங்கரவாதிகள், கொலையாளிகள் உட்பட 20 ஆபத்தான கைதிகள் தப்பியோடினர்.
தப்பியோடிய 20 பேரில், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறையில் இருந்த மூவர் உள்ளதாகவும், கொலைகளுடன் தொடர்புடைய எட்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய கைதிகளில் ஒருவரான ஷாசாத், கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டை சீர்குலைத்ததற்காக இந்தியாவை அச்சுறுத்திய பாகிஸ்தான் ராணுவ முன்னாள் வீரர் என்று செய்தி அறிக்கை கூறுகிறது.
ஷாஜாத் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜான்பாஸின் தலைவர் என்றும் நம்பப்படுகிறது, இது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் நிர்வாகம் மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரலை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், ஏழு பாதுகாப்புப் பணியாளர்களை கைது செய்துள்ளதாகவும், சம்பவம் குறித்து உள் விசாரணையைத் தொடங்கியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறைக் கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த ஊழியர்களின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.