பதவி உயர்வு மற்றும் அரச வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
பதவி உயர்வு மற்றும் அரச வேலை வாய்ப்புகளுக்கு அனுமதிக்கும் பட்டதாரிகள் உட்பட விண்ணப்பதாரர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனரா என அரசாங்கம் ஆராயவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுப் பணித்துறையின் ஓய்வுபெற்ற அரச உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் கூட அரசுக்கு எதிரான செயல்களுக்கு ஆதரவளிக்கும் கீழ்த்தரமான மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் அரச விவகாரங்களை இரகசியமாக சீர்குலைக்கும் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை குறித்த அறிக்கை காட்டுவதாக கூறப்படுகிறது.
அரசுக்கு எதிரான நாசகார மனோநிலை கொண்டவர்கள் அரச வேலைகளில் இணைவது உறுதியான அரச நிர்வாகத்தைப் பேணுவதில் ஊறு விளைவிக்கும். எனவே அரச பணிக்கு புதிய நபர்களைத் தெரிவு செய்யும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில நபர்கள் புரியும் தீய செயல்களால் எந்தவொரு அரசாங்கத்தினாலும் எதிர்காலத்தில் நாட்டைக் கொண்டு நடாத்த முடியாத நிலை ஏற்படும். எனவே உரிய நடவடிக்கைகள் இப்போதே எடுக்கப்பட வேண்டும்.நாசகார மனநிலை கொண்ட மற்றும் கலவர நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் தகவல் திரட்டுவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்
அரச சேவை , பொது நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வேலைக்கு விண்ணப்பிக்க பொலிஸ் அறிக்கையை சமர்ப்பித்தலைக் கட்டாயமாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிய வருகிறது.