ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட கோரிக்கை
எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். – எனவும் ஜனாதிபதி கூறினார்.
அதேவேளை, நல்லாட்சியைப் பொறுத்தமட்டில், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் ஊழல்களை மதிப்பிடுவதற்கான அறிக்கையை தயாரித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களுக்கு ஏற்ப ஊழலுக்கு எதிரான சட்டம் உருவாக்கப்படுவதோடு, புதிய அரச நிதி முகாமை சட்டம் வரைவு செய்யப்படும். வரிச்சலுகைகள், வரி இடைவெளி மற்றும் பெரிய அளவிலான அரச கொள்முதல் ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை பகிரங்கப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பது மற்றும் ஊழலைத் தடுப்பதே நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி கூறினார்.