சூடானில் மர்ம பொருள் வெடித்ததில் 11 சிறுவர்கள் பலி!
வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் பாகர் அல் ஹசால் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மைதானம் ஒன்றில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சிறுவர்கள் கையில் வைத்து விளையாடிய பொருள் ஒன்றே வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மர்ம பொருள் உள்நாட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சூடானில் கடந்த 2013-ல் உள்நாட்டு போர் தொடங்கியது. தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடித்த இந்த போரில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் அங்கு வீசப்பட்டன. அந்த வெடிகுண்டுகள் வெடித்து அவ்வப்போது இது போன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.