கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்க, இந்த கோடையில் வெளிநாடு செல்ல விரும்பும் குடும்பத்தினர் தங்களது பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஏப்ரல் 3 முதல் மே 5 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.ஊதியம், ஓய்வூதியம் வேலைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையை அதிகரிக்கும் வகையில், பொது மற்றும் வணிகச் சேவைகள் (PCS) தொழிற்சங்கம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதன் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தது.
பிரித்தானியா முழுவதும் 4,000-க்கும் அதிகமானோர் பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்களில், குறைந்தது 1000 பேர், அதாவது நான்கில் ஒரு பணியாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.நீங்கள் கோடை விடுமுறைக்கு முன்பதிவு செய்திருந்தால், அதேநேரம் உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகவிருந்தால், அதனை புதுப்பிக்க தேவையான விண்ணப்பத்தை உங்களால் முடிந்தவரை விரைவில் பெறுங்கள் என்று பயண நிபுணர் ராப் ஸ்டெயின்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.
பொறுமையாக புதுப்பிக்கலாம் என திட்டமிட்டிருந்தால், உங்கள் விடுமுறை கனவு நிறைவேறாமல் போகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.பாஸ்போர்ட் புதுப்பித்தல்கள் முடிவடைய 10 வாரங்கள் வரை ஆகும், மேலும் நல்ல நேரத்தில் விண்ணப்பிக்கவும், கடைசி நிமிடத்தில் அல்ல என்று உள்துறை அலுவலகம் ஏற்கனவே வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.