ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு

இன்றைய நவீன வாழ்க்கையில், குளிரூட்டும் கருவிகள் (Air Conditioners) இல்லாமல் வாழ்வதே சாத்தியமற்றதாக மாறிவிட்டது.
வெயிலின் தாக்கம் அதிகமாகும் சூழ்நிலையில், வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள் முதல் வணிக வளாகங்கள் வரையில் எங்கும் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அதிக நேரம் ஏ.சி.யில் இருப்பதால் ஏற்படும் விளைவுகளும், அதற்கான எளிய தீர்வுகளையும் இங்கே காணலாம்.
சரும எரிச்சல்:
ஏ.சி இயங்கும் இடங்களில் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இதனால், சருமம் இயல்பான ஈரத்தன்மையை இழந்து, எரிச்சல், எக்ஸிமா போன்ற சரும பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இதற்குத் தீர்வாக, தினமும் குளித்த பின்னர் மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும். உடலில் ஈரப்பதம் சீராக இருக்க தினமும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
மூச்சுக்குழாய் பிரச்சனைகள்:
ஏ. சி. காற்றின் மூலம் தூசி, பூஞ்சை, கிருமிகள் அதிகம் சேரும். இதனால், ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு எளிதில் மூக்கு அடைப்பு, சளி, இருமல் போன்ற சுவாச நோய்கள் ஏற்படலாம்.
தீர்வு:
மாதந்தோறும் ஏ.சி.யின் ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும்.
அடிக்கடி இயற்கை காற்றுள்ள இடங்களில் சிறுது நேரம் இடைவெளி எடுக்க வேண்டும்.
தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்னை:
அதிக குளிர்ச்சியான இடத்தில் நீண்ட நேரம் இருப்பது, நரம்புகளை பாதித்து தலைவலி, உடல் வலி, தூக்கக் குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதற்கு தீர்வாக ஏ.சி. வெப்பநிலையை 24°C – 26°C இடையே வைத்திருங்கள்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 10 நிமிடம் இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று உடலை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு:
இயற்கை காற்று இல்லாத இடங்களில் நீண்ட நேரம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகிறது.
தீர்வாக, தினசரி வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
சரியான தூக்கம், சத்தான உணவுகள் ஆகிய இரண்டும் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.
வெப்பதை சமாளிப்பதில் சிரமம்:
நீண்ட நேரம் ஏ.சி.யில் பழக்கப்பட்ட உடல், இயற்கை வெப்ப நிலையை உடனடியாக சகிக்க முடியாமல் இருக்கும். அதன் விளைவாக வாந்தி, மயக்கம், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
தீர்வு:
வழக்கமாக இயற்கை வெப்ப சூழ்நிலைக்கு உடலை பழக்கப்படுத்த வேண்டும். மேலும், வெளியே செல்லும் சில நிமிடங்களுக்கு முன் ஏ.சி.யை ஆஃப் செய்துவிட்டு, சாதாரண சூழ்நிலையில் இருக்கலாம்.
ஏ.சி. நம்மை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் மிக பெரிய சாதனமாக இருந்தாலும் கூட, அது நம்மை பாதிக்காத அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கையை விலக்கி, எல்லாமே கருவிகள் மீது சார்ந்துவிட்டால், நமது நாளைய தலைமுறையினர் ஆரோக்கியமான உடலையும், இயற்கை சூழலையும் அனுபவிக்க மறந்துவிடுவர்.
எனவே, குளிர்ந்த அறையில் மட்டும் வாழ்வதைவிட, இயற்கையோடு இணைந்து வாழ்வதே நம்மையும், நம் தலைமுறையினரையும் ஆரோக்கியமாக வைக்கும்.
நன்றி – கல்கி