இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பசுமைப் பொருளாதாரத்திற்கான இலங்கையிலுள்ள சாத்தியக்கூறுகள் சாதகமாக உள்ளதாகவும், நாடு அதனை நோக்கிச் செல்வதுடன், விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகம் வீணடித்துள்ளன.
அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனியும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதால் வெற்றிகள் கிட்டப்போவதில்லை. இங்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மட்டும் நமக்கு போதுமானதும் அல்ல.
அதற்கு அப்பால் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதே முக்கியமானதாகும். நாம் இப்போது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதையே செய்ய வேண்டும். அதற்கான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கிறது.
அமைச்சர் சியம்லாபிட்டிய எடுத்துக்காட்டியதை போன்று அதன் ஆரம்பம் கடினமானதாக இருந்தாலும் நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகும். எம்மால் எந்த காரணத்திற்காகவும் அதனைக் கைவிட முடியாது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது மட்டுமின்றி உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிகளுக்கேற்ப முன்னோக்கிச் செல்வதும் எமது கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.