இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பம்
காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான உத்தேச படகுச் சேவை தொடர்பான கலந்துரையாடல் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இலங்கை கடற்படை மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் படகு சேவைகளை இயக்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனான கலந்துரையாடலின் போது, 100 கிலோகிராம் எடையுள்ள பயணப் பொதிகளை ஒரு பயணிக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கும் அதேவேளை, ஒரு வழிப் பயணத்திற்காக ஒரு பயணிக்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும் என படகு உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதல் கட்டத்தில் பகல்நேர செயல்பாடுகள் மட்டுமே அமலில் இருக்கும்.
பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு ஒரு படகு ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்ல 4 மணி நேரம் ஆகும்.
முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல்நேர நடவடிக்கைகள் மட்டுமே அமலில் இருக்கும் என படகு சேவை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.