ஜென்ஸீ தலைமுறையை நான் நம்புகிறேன் – மோடி
ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் மீது தான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களின் 10 ஆவது குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன்களான ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 வீர பாலகர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.
இதன்படி புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘வீர பாலகர் தினம்’ தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளீர்கள். ஒரு வகையில் நீங்கள் அனைரும் ஜென்ஸி தலைமுறையினர். உங்கள் தலைமுறைதான் இந்தியாவை, வளர்ந்த இந்தியா என்ற இலக்கிற்கு அழைத்துச் செல்லும். ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்களையும் நம்பிக்கைகளையும் நான் காண்கிறேன், புரிந்து கொள்கிறேன். உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
யார் பெரியவர், யார் சிறியவர் என்பதை வயது தீர்மானிப்பதில்லை. உங்கள் செயல்கள் மற்றும் சாதனைகள் மூலம் நீங்கள் பெரியவர்களாக உயர்கிறீர்கள்.
இளம் வயதிலேயே மற்றவர்கள் உங்களிடம் இருந்து உத்வேகம் பெரும் வகையில் நீங்கள் பணியாற்ற முடியும். எனவே, வயதைப் பற்றிய கவலையின்றி பெரிய சவால்களை எதிர்கொள்ளுங்கள்.
நாட்டின் மாபெரும் ஆளுமைகளிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வெற்றியை உங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் கருதக்கூடாது. உங்கள் வெற்றி தேசத்தின் வெற்றியாக மாற வேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியாவின் வெற்றியால் உங்களுக்கு இணையத்தின் சக்தி கிடைத்திருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் துறைகளில் நுழைய விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற திட்டங்கள் உள்ளன. விளையாட்டுக்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேலோ இந்தியா திட்டம் உள்ளது.
வீர பாலகர்களான ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோர், தாங்கள் தேர்ந்தெடுத்தப் பாதை எவ்வளவு கடினமானது என்று கருதவில்லை. அந்தப் பாதை சரியானதுதானா என்பதை மட்டுமே அவர்கள் கருதினார்கள். இன்று அதே உணர்வு நமக்குத் தேவை.
இந்தியாவின் இளைஞர்களிடமிருந்தும் நான் இதையே எதிர்பார்க்கிறேன். பெரிய கனவுகளை காணுங்கள், கடினமாக உழையுங்கள், உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் தளர விடாதீர்கள்” என்றார்.





