குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்து போத்தலினுள் இருந்த புழுக்கள் – இந்தியாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

இருமல் மருந்து விவகாரத்தை அடுத்து அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருந்துக் கரைசலில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மத்தியப் பிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர்(Gwalior) மாவட்டம் மொரார்(Morar) நகரில் செயல்படும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு அசித்ரோமைசின்(Azithromycin) நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது.
அதை வாங்கிய குழந்தையின் தாய், உற்றுக் கவனித்தபோதுதான் மருந்துப் போத்தலினுள் பல புழுக்கள் இருந்தது தெரியவந்தது. கடும் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனையில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அங்குள்ள அனைத்து மருந்துகளையும் பயன்படுத்த முடியாதபடி முத்திரை வைக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்துப் போத்தல்களும் திரும்பப் பெறப்பட்டன.
நோய்த் தொற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மருந்துக் கரைசல்களும் போபாலில்(Bhopal) உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் ஆய்வு முடிவுகள் வந்தபின், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு மருத்துவமனை மருந்து ஆய்வாளர் அனுபூதி சர்மா தெரிவித்துள்ளார்.