லண்டனில் ஏலத்திற்கு விடப்படவுள்ள உலகின் மிகவும் பழமை வாய்த மது பாட்டில்!
உலகின் மிகவும் பழமை வாய்ந்த மது பாட்டில் ஒன்று லண்டனில் ஏலம் விடப்பட உள்ள நிலையில், 12 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மெக்காலன் என்ற நிறுவனம் 1926ம் ஆண்டு முதல் ஸ்காட்ச் வகை விஸ்கி மதுபானங்களைத் தயாரித்து வருகிறது. 60 ஆண்டுகளில் சுமார் 40 பாட்டில்களை மட்டுமே இந்த நிறுவனம் தயாரித்து உள்ளதாக கூறப்படுவதால், இந்த மதுபாட்டில்களை, செல்வந்தர்கள் விலைக்கு வாங்கி, அவர்களின் தனிப்பட்ட சேகரிப்பில் பாதுகாத்து வருகின்றனர்.
இதனால் இந்த வகை விஸ்கிகளின் விலை பல கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு இதே வகை விஸ்கி பாட்டில் ஒன்று ஏலம் விடப்பட்டபோது, இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் போனது.
இது அதற்கு முன்பாக ஏலம் போன பழமையான மது வகைகளின் விலைகளின் சாதனையை முறியடித்து இருந்தது. இந்த நிலையில் அதே காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு பாட்டில் மது, வருகிற நவம்பரில் விற்பனை செய்யப்பட உள்ளதாக சோத்பி ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மது பாட்டில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஏலம் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரபல இத்தாலிய கலைஞர் வெளாரியோ அடாமியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட லேபிள் இந்த பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.