தாரா கடவுள் சிலையை மீட்கும் பணிகள் முன்னெடுப்பு
இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு கொண்டுச் செல்லப்பட்ட ‘கடவுள் சிலை’ உள்ளிட்ட தொல்பொருட்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு 07, அறக்கட்டளை நிறுவனத்தில் இன்று (08) நடைபெற்ற தேசிய தொல்லியல் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பழங்கால பொருட்களை மீட்டுத் தந்த டச்சு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இதன் இரண்டாம் பாகம் நெதர்லாந்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளப்படும் எனவும், பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த வளங்களை இலங்கைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொல்லியல் என்ற சொல் பழமையானது என்பதால் பாரம்பரிய மேலாண்மை என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பாரிய வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களம் தனிமைப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாறுவதற்கு ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பில்லாததே காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.