பெண்கள் உலக கோப்பை – இறுதிபோட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின்
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி முடிவில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது.
காலிறுதி ஆட்டங்களை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 15) முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியிாக ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகள் இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதியும், இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது.